அனைத்துலக அளவிலான குடியேற்ற உடன்படிக்கை ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் மன்றின் உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
துன்பங்களையும் குழப்பத்தையும் தடுக்கக்கூடிய அந்த அனைத்துலக அளவிலான குடியேற்ற உடன்படிக்கைக்கு 150 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உடன்பட்டுள்ள அதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொராக்கோவில் உள்ள மரகேச்சில் நடைபெறும் அனைத்துலக அரசாங்க மாநாட்டில் பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் முறையான இடம்பெயர்வுக்கான அனைத்துலக அளவிலான உடன்படிக்கை இன்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை உள்ளூர், தேசிய, பிராந்திய மற்றும் உலக மட்டங்களில் இடம்பெயர்வுகளை சிறப்பாக நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கபபட்டுள்ளது.
குடியேறிகள் அல்லது அகதிகள் தங்கள் பயணத்தின் வெவ்வேறு கட்டங்களில் சந்திக்கும் அபாயங்கள் மற்றும் பாதிப்புகளை குறைப்பது உள்ளிட்ட விடயங்கள் இந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கடந்த யூலை மாதம் அமெரிக்கா தவிர்த்து ஏனைய 193 நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டது.
எனினும் தற்போது அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ஒஸ்ட்ரியா, பல்கேரியா, ஹங்கேரி, செக் குடியரசு, போலந்து, டொமினிகன் குடியரசு, சிலி, லட்வியா, ஸ்லோவாக்கியா, எஸ்டோனியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளன.
அர்ப்பணிப்பு மற்றும் வலுவான முயற்சிகளின் மூலமே இந்த ஒப்பந்தம் சாத்தியமானது என இன்று மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கெடரெஸ் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்வு தவிர்க்கமுடியாத ஒரு விடயம் என்றும் குறிப்பிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர், ஆனால் அது பாதுகாப்பானதாகவும் ஒழுங்கானதாகவும் அமையவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.