இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகாரணமாக இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளரும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான தங்கவேல் ஜேகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு கூறியுள்ள அவர், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசிற்கு ஆதரவு வழங்குவதென்பது பாரிய நாடகம் எனவும், அண்மையில் இடம்பெற்ற அரசியல் விடயங்களை தாங்கள் நாடகமாகவே பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக ரீதியில் இலங்கைக்கு என்றுமில்லாதவாறு பாரிய அழுத்தம் காணப்பட்டது எனவும், போர்குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அனைத்துலக ரீதியில் இலங்கைக்கு பாரிய அழுத்தம் காணப்பட்ட நிலையில், இவற்றிலிருந்து மீள்வதற்காகவே இந்த அரசியல் நாடகம் முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது சிறந்த சூழல் காணப்படுகின்றது என்பதை அனைத்துலகத்திற்கு காண்பிப்பதற்காக நீதி துறை சுயாதீனமாகவும், நம்பிக்கை தன்மை கொண்டதாகவும் செயற்படுவதாக காண்பிக்கப்பட்டுள்ளதை காண்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு நீதி துறை சீராகவும், நேர்மையாகவும் செயற்படுகின்றது என்பதனால், இலங்கையில் தற்போது சுமுகமான சூழல் காணப்படுகின்றது என்பதை அனைத்துலகத்திற்கு காண்பிக்கும் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது எனவும், இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் துணைபோயுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை அனைத்துலகத்தின் பார்வையை குறைப்பதற்கான முயற்சியின் ஓர் அங்கமாகவே பார்ப்பதாகவும், இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் நலன் சார்ந்து செயற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு எவ்வித நிபந்தனையும் இல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவினை தொடர்ந்து வழங்கி வருகின்றது என்றும், இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள குடியேற்றம், பௌத்த மயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், அரசியல் கைதிகள் உள்ளிட்ட விடயங்களுக்கான உத்தரவாதத்தினை எழுத்து மூலமாக பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.