பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”நாடு என்ற வகையில் நாம் மனித உரிமைகளைப் பாதுக்காக்கவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதற்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை.
நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருந்ததை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்று யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்து விட்டன.
தற்போதும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் அரசாங்கம் அதனை நீடித்து தன், அடக்கு முறைகளுக்கு பயன்படுத்துகிறது.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் விசாரணைகள் இன்றி வருடக்கணக்கில் சிறையில் வாழ்கின்றனர்.
அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த நீதிமன்றங்களை நாடும் வாய்ப்பு இல்லை. பயங்கவரவாதத் தடைச்சட்டம் தொடர்ச்சியாக நீடிக்கப்பட, அவர்கள் 15 வருடங்களாக சிறையில் அடைபட்டுள்ளனர். இது நியாயமா?
குறைந்தது நீதிமன்றத்தின் ஊடாக தாம் குற்றவாளியா, நிரபராதியா என்று தெரிந்து கொள்ளவும் முடியாதுள்ளனர். அவர்கள் குற்றவாளி என்றால் தண்டனை வழங்குவது நியாயமானது. இது ஒன்றும் இல்லாமல் நிரபராதி ஒருவர் 10 வருடமாக சிறையில் இருப்பது சாதாரணமானதா?
பலர் 3 மாதம் சிறையில் இருக்க முடியாமல், போராட்டம் நடத்தும் நிலையில், அரசியல் கைதிகளின் நிலையை யோசித்துப் பாருங்கள்.
எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். ஆனால் அது ஐ.நா சபைக்கு ஏற்றாற் போல் அல்ல. அதற்காக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கிவிட்டதாக ஐ.நாவிற்கு கூறி, சிறு, சிறு மாற்றங்களைச் செய்து அதனை இன்னும் பலப்படுத்தி வேறு ஒரு சரத்தாக கொண்டு வரக்கூடாது” எனத் தெரிவித்தார்.