அமெரிக்க மற்றும் மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 20 சடலங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் , அவற்றில் 17 கருகிய நிலையில் காணப்பட்டதாகவும் மெக்ஸிகோ தெரிவித்துள்ளது.
குறித்த சடலங்களை நேற்று (புதன்கிழமை) கண்டுபிடித்ததாகவும் அவற்றுக்கு அருகில் 5 வாகனங்களும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நியூவோ லாவோடோ நகருக்கு அருகே (அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்திற்கும், மெக்ஸிகோவின் தாமொளிபஸ் மாநிலத்துக்கும் இடையிலான எல்லைப்பகுதியில்) அவை காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இது தொடர்பிலான மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.
மெக்ஸிகோவில் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் இடம்பெறும் மாநிலங்களில் தாமொளிபஸ் மாநிலமும் ஒன்றாகும். குறிப்பாக அங்கு கடந்த சில ஆண்டுகளில் அடையாளம் காணப்படாத நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.