கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய இரா.சம்பந்தன், சட்டத்திற்கும் நீதிக்கும் முரணான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதனை ஆளுநர் அனுமதிக்க கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனையுடனான முடிவுகள் எட்டப்படுவதானது தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் என தெரிவித்தார்.
மேலும், அரச நிர்வாக நியமனங்கள் வழங்கப்படும்போது அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுதல், கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் வாழும் பல்லின மக்களிடையே காணப்பட்ட இன விரிசல்களை இல்லாமல் செய்வதற்கு உதவும் எனவும் தெரிவித்தார்.
அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஆளுநரும் அவரது நிர்வாகமும் செயற்படவேண்டும் என இரா சம்பந்தன் மேலும் கேட்டுக்கொண்டார்.