ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.
அரசமைப்பு நிர்ணய சபையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணைய வேண்டும் எனவும், அமைச்சுப் பதவிகளைப் பெற்று வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என்றும், கூட்டமைப்பு அரசுன் இணைவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும், பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சௌமியமூர்த்தி தொண்டமான் ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால் மலையகத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தல் – பாதிப்பு ஏற்பட்டதா எனவும், அதேபோல் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளிக் கட்சியாக அங்கம் வகிப்பதால் முஸ்லிம் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களில் எதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கட்டியெழுப்ப அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை அரசமைப்பு உருவாக்க செயற்பாடுகளில் இருந்து இறுதிவரை பின்வாங்க போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று கூடிய அரசமைப்பு சபையில் புதிய அரசமைப்பு குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்பு உருவாக்கத்தில் உள்ள பிரதான தமிழ்க் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது எனவும், இலங்கையின் அரசமைப்பு அனைவரது ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற அடிப்படையில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு பிரதான தரப்புகளும் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான இந்த பொன்னான தருணத்தை இழந்து விடக்கூடாது எனவும், அதேவேளை புதிய அரசமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேசவரைவு திட்ட அறிக்கை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.