ஜனாதிபதி செயலகம் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே வெடுக்குநாறிமலையை ஆய்வு செய்வதாக வவுனியா மாவட்டத்தின் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் வெடுக்குநாறிமலையை ஆய்வு செய்யும் நோக்கில் கொழும்பிலிருந்து வருகை தந்திருக்கும் தொல்லியல் நிபுணர்கள்,வவுனியா மாவட்ட தொல்லியல் திணைக்களத்தினர்,நெடுங்கேணி பொலிஸார்,இராணுவத்தினர் போன்றோர் வருகை தந்து தற்போது ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆய்வு செய்வதனை இடைநிறுத்த சென்ற ஆலய நிர்வாகத்தினருக்கும் தொல்லியல் திணைக்களத்தினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது இதன்போதே குறித்த திணைக்கள அதிகாரி இதனை தெரிவித்தார்.
நீண்டகாலமாக வெடுக்குநாறிமலையின் பிரச்சினை தொடர்கின்றது எனவும்,இதனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் பிரதேச மக்கள் இருக்கின்றார்கள் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜனாதிபதி செயலகத்திற்கு தெரியப்படுத்தியிருக்கின்றார்.
அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகம் தொல்லியல் திணைக்களத்தினரை உடனடியாக ஆய்வினை மேற்கொண்டு தரவுகளை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது அதன் அமைவாகவே இந்த ஆய்வனை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்
அதற்கமைவாக தற்போது வெடுக்குநாறிமலையில் காணப்படும் கல்வெட்டின் எழுத்துக்களை பிரதி எடுக்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.