இன்று தைத்திங்களின் முதல் நாள். தைப்பொங்கல் திருநாள். மார்கழிப் பெண்ணுக்கு விடை கொடுத்து, தைப் பாவை எனும் தையல் மெல்ல நடைபோடத் தொடங்கும் முதல் நாளும் இதுவே. தமிழர் புத்தாண்டு!!தமிழர்களின் ஆண்டுக்கணக்கான “திருவள்ளுவர் ஆண்டு’ தொடங்கும் முதல் நாளும் கூட இதுதான்.
தமிழர்களின் திருநாள் கொண்டாட்டங்களுள் முக்கியமானது தைப்பொங்கல். சாதி,மதம், இனம் தாண்டி, இயற்கையோடு இயைந்து தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் திருநாளும் இதுவே.
வாழ்வியல் சிறப்பும், அறிவியல் கருத்தும் பொதிந்து கிடக்கும் ஒரு பண்டிகை நாள் இதுவென்றால் அது மிகையாகாது.
இயற்கையின் இயக்கத்தின் உட்சூட்சுமத்தை அறி வியல் ரீதியாக உணர்ந்து, “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்!’ என்ற உணர்வெழுச்சியுடன் தமிழர்கள் வழமையாக அனுஷ்டிக்கும் கொண்டாட்ட நாள் இது.
அவனியின் அசைவியக்கத்துக்கு மூலமும் முதலும் ஆதவனே: அவனின்றி அருணனின்றி அணுவும் அசையாது என்பது அறிவியல் உண்மை.
சக்தியின் மூலமும் உறைவிடமும் உதயனே. உலகின் உயிர்ப்புக்கும், உயிர் வாழ்வுக்கும் உறுதுணை அவனே.
ஆதவனின் அந்தச் சக்தியை உலகில் பதிப்பவை பச்சைத் தாவரங்கள்தாம். சூரிய சக்தியைத் தொகுத்து விளைச்சலாக அவனிக்குத் தருபவை இந்தப் பச்சை யங்களே. உலகின் உணவுச் சங்கிலி இந்த ஒளித் தொகுப்பில் இருந்துதான் தொடங்குகின்றது. இந்த விஞ்ஞானத்தைத் தனது மெஞ்ஞானத்தால் உணர்ந்த தமி ழன், அந்த இயற்கையின் தத்துவத்தை உணர்ந்து, ஏத்தி, மகிழ்வதற்காகத் தேர்ந்ததே பொங்கல் திருநாள்.
சூரிய சக்தியின் வலுவை பச்சைத் தாவரங்கள் மூலமாக விளைச்சலாக்கித் தானியவடிவில் நமக்குத் தருவது உழவு. சக்தியின் மூலமான சூரியனையும், அந்த சூரிய சக்தியை உலகுக்குப் பெற்றுத் தரும் உழவுத் தொழிலையும், அந்த ஆதவனின் அருட்கொடை நெற்குவியலாகக் கிட்டும் பேறையும் விதந்து, மகிழ்ந்து, விளைச்சல் வேளை யில் அவன் கொண்டாடத் தேர்ந்ததே பொங்கல் பெரு விழா.
சூரியன் தனு இராசியிலிருந்து மகர இராசிக்கு நுழைவதையே “மகர சங்கிராந்தி’ என்கிறோம். அன்று தான் தைப்பாவை பிறக்கின்றாள். அன்றுதான் சூரிய பகவான் வடக்கு நோக்கி சஞ்சரிக்கத் தொடங்குகின் றான். இதனை “உத்தராயணம்’ என்று கூறுகின்றோம். அது இன்று இந்தப் பொங்கல் திருநாளன்று மீண்டும் தொடங்குகின்றது.
இன்று பொங்கல் என்றால் நேற்றுப் போகித் திருநாள். “பழையன கழிதலும், புதியன புகுதலும்’ போகித் திருநாளின் உள்ளார்ந்தம். அந்தப் போகி நேற்றுப் போயிற்று. இன்று பொங்கல். நேற்றுக் கழிந்தது எது? இன்று புகுவது யாது? போகி யோடு போனது எது? பொங்கலோடு வருவது எது? என்பவை நியாயமான வினாக்களே.
“தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். புதிய தடத்தில் பயணிக்க ஆரம்பிக்கும் சூரிய பகவானின் ரதம் நல்வழியைக் காட்டும் என்பது நம்பிக்கை.