ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை கூட்டமைப்பிற்கு அடிபணிந்து விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றம் சுமத்துகின்றார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனும், வடக்கில் இருவேறு நிகழ்வுகளில் பங்கேற்று தமது அனுமதி இல்லாமல், அமைச்சரவைத் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது எனக் கூறியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும்,அரசாங்கத்திற்கும் தமக்கும் இடையில் உடன்பாடு உள்ளது. எம்முடன் இணைந்து செயற்படவே பிரதமர் வடக்கினைப் பொறுப்பேற்றார். இதனை செய்வதாக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்தே அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள்.
இதனால் கூட்டமைப்பு விரும்பாத எந்தவொரு யோசனையும் அமைச்சரவையில் நிறைவேறாது. அதேபோல் கூட்டமைப்பிற்கு மாத்திரம் தேவைப்படுகின்ற எந்தவொரு யோசனையும் அமைச்சரவை ஊடாக நிறைவேற்றும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
வடக்கு அமைச்சும், பிரதமரின் கீழ் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இதனால் வடக்கின் அபிவிருத்தி எவ்வாறு இருக்க வேண்டும் என்று தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது” என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்