நாட்டை பிளவுபடுத்தும் வகையிலான எந்தவொரு கோரிக்கையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு அமைச்ருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை காட்டிக் கொடுக்கும் வகையில் தமது அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கைகளையும் கைச்சாத்திடவில்லை என்று அவர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கை ஒன்றை பிரதமர் தலைமையிலான அரசாங்கம் செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கில் மக்களிடம் காணிகள் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், வீடமைப்பு திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளையும் மேம்படுத்துமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இரண்டு மாகாணங்களான வடக்கு கிழக்கில் அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்து மேம்படுத்துவது துரோகச் செயலாகவோ அல்லது குற்றமாகவோ அமையாது என்றும் சஜித் பிறேமதாச குறிப்பிட்டார்.