பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு, லண்டன் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்பினால் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள் இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டங்காரர்களை அச்சுறுத்தும் வகையில் கழுத்தை வெட்டுவேன் என்று தூதுரக பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை காட்டிய கானொளி சமூக ஊடகங்களில் வெளியாகியது
இந்த சம்பவத்தை அடுத்து பிரியேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாட்டிற்கு வரவழைக்கப்பட்டதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவ மட்டத்தில் விளக்கம் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அவர் மீண்டும் பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டார். இந்த நிலைமையில் அவருக்கு எதிராக பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதன்பிரகாரம், பிரித்தானியாவின் பொது மக்கள் ஒழுங்கு சட்டத்தை பிரியங்க மீறியுள்ளதாகவும், அவரைக் கைது செய்யுமாறும் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கிருந்தவர்களே, முறைப்பாட்டாளராகவும், சாட்சியாளராகவும் இருந்துள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பின் சார்பில் நேற்றைய தினம் முன்னிலையான பப்லிக் இன்டரெஷ்ட் லோவ் சென்டர் (Pரடிடiஉ ஐவெநசநளவ டுயற ஊநவெசந) சட்ட ஆலோசனை நிறுவனத்தின் சட்டத்தரணி ஹெலன் மொவாட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, இராஜதந்திர அதிகாரி என்பதனால், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவராலயம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த பிடிவிராந்து உத்தரவு குறித்து ராஜதந்திர மட்டத்தில் இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவித்தல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் இலங்கை தூதுவராலயம் தெரிவித்துள்ளது.