புதிய அரசியலமைப்புக்கான வரைபு இன்னமும் தயாரிக்கப்படவில்லையெனவும், அரசியலமைப்புத் தொடர்பாக அரசு எதையும் செய்யவில்லையெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யக்கலமுள்ளவில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு உருவாக்கச் சபை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பிரிக்கப்பட முடியாத நாட்டில் அதிகாரங்களைப் பகிர்வதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடெனவும், டீ.எஸ். சேனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாஸ ஆகியோர் கொண்டிருந்த நிலைப்பாடு இதுவே எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பிராந்தியங்களின் ஒன்றியமாக இலங்கையை மாற்றும் திட்டத்தை 1995 ஆம் ஆண்டில் அப்போதைய அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க முன்வைத்தபோது அது நாட்டைப் பிளவுபடுத்த மாட்டாதென மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தாரென ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.