விரைவில் இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு உத்தரபிரதேசத்தின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் அவர் பொறுப்பேற்றுக்கொள்வார்.
குலாம் நபி ஆசாத், உத்தரபிரதேசத்தின் பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஹரியானா மாநிலத்தில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவுக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக அவர் செயல்படுவார்.
இந்திரா காந்தியும் பிரியங்கா காந்தியும்
பிரியங்கா காந்தி அடிக்கடி அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் ஒப்பிடப்படுகிறார்.
அவரது உடை உடுத்துவது, பேசும் பாணி , தலைமுடி அலங்காரம் உள்ளிட்டவை இந்திரா காந்தியை போல அமைந்திருப்பதாக ஒப்பிடப்படுகிறார்.
பிரியங்கா காந்தி தனது 16 வயதில் முதல்முறையாக பொதுவெளியில் பேசியிருக்கிறார்.
”2014 லோக்சபா தேர்தலில் பிரியங்காவை பனாரஸ் தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் விரும்பியது. ஆனால் நரேந்திர மோதிக்கு எதிராக போட்டியிடும் சிக்கலை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது. ஒரு கட்டுரையில் மூத்த பத்திரிகையாளர் அபர்ணா திவேதி குறிப்பிட்டுள்ளார்”
சோனியா காந்தியிடம் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வருவாரா என கடந்த ஆண்டு கேட்கப்பட்டபோது, அரசியலுக்கு வருவது குறித்து பிரியங்கா தான் முடிவு செய்ய வேண்டும் என சோனியா காந்தி கூறினார்.