அம்மா மக்கள் முன்னெற்றக்கழக கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் ரிரிவி தினகரன் கோரிய குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2017 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரனுக்கு தொப்பி சின்னம் மறுக்கப்பட்டதால், குக்கர் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார்
அதன்பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியையும் ஆரம்பித்து அக்கட்சியின் பொதுச் செயலாளராக தினகரன் செயற்பட்டுவருகின்றார்.
திருவாரூர் இடைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தினகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும், தங்களுக்குக் குக்கர் சின்னத்தை மட்டுமே ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விசாரணையின் போது குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்த தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்படி பதிவு செய்யப்படாத அல்லது அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கு நிரந்தரமாக ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் முன்னிலையாக வழக்கறிஞர் அறிவித்தார்.
மேலும் பொதுப் பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சிக்கு உரிமை கோர முடியாது என்றும் அவர் பதிலளித்தார்.
ஆனால் இரட்டை இலை சின்ன வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம், சின்னத்தை ஒரு அணிக்கு ஒதுக்கியிருக்கிறது. இதனை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. அப்படிப்பட்ட சூழலில் தமது தரப்பையும் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகவே கருத வேண்டும் தினகரன் தரப்பு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
2017 மார்ச்சில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி தனிச் சின்னம் ஒதுக்கியபோது, இதுபோலவே பொதுச் சின்னம் ஒன்றை தங்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே தற்போதைய சூழலிலும் பொதுச் சின்னத்தை ஒதுக்க முடியும் என்ற வாதத்தை அவர் முன்வைத்தார்.
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், தினகரன் தரப்புக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்கவே கூடாது என்ற வாதிட்டனர்.
இந்நிலையில் சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.