திருமலையில் வைத்து 2016ம் ஆண்டு படுகொலையான சக ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி எதிர்வரும் சனிக்கிழமை யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு மேலும் பல ஊடக அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்க முன்வந்துள்ளன.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் ஊடக படுகொலைகளிற்கான நீதி கோரி யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கிழக்கு ஊடக அமையம்,தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திந்கான செயற்பாட்டுக்குழு,தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மன்னார்,வவுனியா,முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர் அமைப்புக்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணையவுள்ளன.
ஊடகப்படுகொலைக்கான நீதி கோரும் இப்போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காக குரல் கொடுக்க ஊடக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
அம்பாறையில் பிறந்திருந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜன் திருமலையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது இலங்கை அதிரடிப்படைகளால் அரங்கேற்றப்பட்ட ஜந்து பாடசாலை மாணவர்களது படுகொலையினை அம்பலப்படுத்திய நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தது தெரிந்ததே.