குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான பொறிமுறையை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தக் கூடாது என்று உலகத் தமிழ் பேரவை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அண்மையில் படைவீரர்கள் மற்றும் புலம்பெயர் சமூகம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு பதிலுரைக்கும் வகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட படைத்துறையினர் பற்றிய விபரங்களையும் சாட்சியங்களையும் புலம்பெயர் சமூகத்தினர் வழங்க வேண்டுமெனவும், படைத்துறையினர் அனைவரும் போர்வீரர்கள் கிடையாது எனவும், கொலையாளிகளை போர்வீரர்களாக போற்ற முடியாது எனவும் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியிருந்தார்.
படைத்துறையினர் மேற்கொண்ட குற்றச் செயல்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமுல்படுத்தப்படும் வரையில் தகவல்களை வழங்க முடியாது என்றும் உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அதி உயர் சிவில் சேவை பதவிகளில் ஒன்றை வகிக்கும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆக்கபூர்வமான கோரிக்கையை விடுத்த போதிலும், நாட்டின் அரச தலைவர் உள்ளிட்ட ஏனைய தரப்பினரின் நிலைப்பாடு ஆரோக்கியமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.