வடகிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று ஆரம்பமாகி வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றுகொண்டிருக்கிறது.
தாம் சிறீலங்கா இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகளின் நிலவரம் மற்றும் சிறீலங்கா இராணுவத்தினராலும், அரச புலனாய்வாளர்களினாலும் வெள்ளை வான்களில் கடத்திச்செல்லப்பட்ட எம் உறவுகள் எங்கே என்று பத்து வருடங்களாக நாம் கேட்ட வண்ணம் உள்ளோம். ஆனால் இன்று வரைக்கும் எதுவித பதிலும் சிறீலங்கா அரசினால் எமக்கு கிடைக்காததினால், சர்வதேசந்தான் இதற்கான பதிலை பெப்ரவரி மாதம் 25 திகதி ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40வது கூட்டத்தொடரின் போதாவது சிறீலங்கா அரசிடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகி பொதுச்சந்தையூடாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகம் வரைக்கும் தமது வேதனைகளையும், ஆதங்கங்களையும் கூறிய வண்ணம் பேரணியாக நடந்து செல்கின்றார்கள்.
இதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளுக்கு சர்வதேசம் நல்லதோர் பதிலை சிறீலங்கா அரசிடம் இருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என கூறி வடகிழக்கு பொதுமக்கள், பொது அமைப்பினர், மதகுருமார்கள், அருட்தந்தையர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்….