இந்திய மக்களவை தேர்தலின்போது, பிரதமர் மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்ந்து ஹிந்து தேசியவாத கருத்துகளை வலியுறுத்தினால் வகுப்புவாத வன்முறைகளுக்கான சாத்தியம் அதிகம் என்று அமெரிக்க உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகளாவிய அச்சுறுத்தல்களின் மதிப்பீடு தொடர்பாக, அமெரிக்க உளவு அமைப்பான தேசிய உளவுப் பிரிவின் இயக்குநர் டேனியல் ஆர்.கோட்ஸ் தயாரித்த அறிக்கை, அமெரிக்க செனட் சபையின் உளவு பிரிவுக்கான குழுவிடம் ஜனவரி 29-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தெற்காசியாவில் நிலவும் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில், இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தொடர்புடைய விவரங்களும், அந்த நாடுகள் எதிர்கொள்ளும் சாத்தியம் மிகுந்த அச்சுறுத்தல்கள் குறித்தும் அமெரிக்க உளவு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
அதில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் தொடர்ச்சியாக நடந்து வரும் அணு ஆயுத திட்டங்களால் தெற்காசியாவில் அணு பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், புதிய வகை அணு ஆயுதங்களின் அறிமுகம், இந்த பிராந்தியத்தில் புதிய வடிவிலான ஆபத்துகளை தீவிரமாக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், குறுகிய தூர இலக்கை தாக்கக் கூடிய புதிய வகை தந்திரோபாய ஆயுதங்கள், கப்பல் மற்றும் போர் விமானத்தில் இருந்து செலுத்தக் கூடிய ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகள் போன்ற புதிய வகை ஆயுதங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்க உளவு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா, தனது முதலாவது அணு ஏவுகணைகள் அடங்கிய ஆயுதம் தாங்கி நீர்மூழ்கி கப்பலை இயக்கியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.