மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமென இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சர்வதேச ஜனநாயகத் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள டிசம்பர் மாதத்திற்கு முன்னர், மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதி மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.
நாட்டுக்கு உகந்த தேர்தல் முறை எது என்பது தொடர்பில் நான் கூறவிரும்பவில்லை அதனை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
ஆனால் தற்போது உடனடியாக பழைய முறைமைக்கு அமையவே தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது.
புதிய முறைமைக்கு அமைய நடத்துவதென்றால் நிறைவேற்றப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை ஒன்று இல்லை.
அவ்வாறு இல்லாமல் எந்ததெந்த தொகுதிகள் என்பதை விளங்கிக் கொள்வது கடினம்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.