எதிர்வரும் சுதந்திர தினத்தை நிராகரித்து சுதந்திரத்திற்காக அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மக்களை அணிதிரளுமாளும் அழைத்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களால் தமிழ் தேசத்தின் இறைமை முற்றாக பறித்தெடுக்கப்பட்டது.
அதன் பின்னர், இலங்கைத்தீவின் ஆட்சிபீடத்தில் ஏறிய பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் தேசத்தில் இனவழிப்புச் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வந்துள்ளனர்.
இதனால் தமிழர் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த யுத்தம் இனவழிப்பு ஒன்றின் மூலம் 2009இல் அழிக்கப்பட்டது.
இன்று, இனவழிப்பு யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. அச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் கேட்பாரின்றி கைது செய்யப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது கண்ணீர் போராட்டம் வீதியோரங்களில் 700 நாட்களைத் தாண்டியும் தொடர்கின்றது.
தமிழர்களின் அப்பாவி இளைஞர்கள் சிறைகளுக்குள் வாடுகிறார்கள். தமிழரின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.
இதனைவிட தமிழ் இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் வகையில் திட்டமிட்டு போதைப் பழக்கத்திற்கு அடிடையாக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் இலங்கை அரசானது தனது இராணுவ பொலிஸ் அதிகாரங்களையும், ஏனைய அரச அதிகாரங்களையும் பயன்படுத்தி தமிழர்களை அச்சுறுத்தி அவர்கள் மீது சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை திணிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது.
இவை அனைத்துக்கும் முடிவுகட்டப்பட வேண்டும் என்ற நோக்குடன் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை நிராகரித்து கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி, கறுப்புக் கொடிகளைக்கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
அந்தவகையில் இம்முறை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோடு, அதற்கு மக்கள், பொது அமைப்புக்களை அணிதிரளுமாளும் அழைக்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.