மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்வதாக, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சிபிஐ அதிகாரிகள் கைது செய்யச் சென்ற கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்த பின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பிரதமர் மோடியும், பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும், திட்டமிட்டு தம்மை அவமதிப்பதாக குற்றம்சாட்டினார்.
உரிய அனுமதியின்றி சென்ற புலனாய்வுத்துறை அதிகாரிகளை, தாங்கள் கைது செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்ட மமதா, ஆனால் அவர்களை தாங்கள் தடுத்து மட்டுமே நிறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
சிபிஐ மூலம் தங்களை மிரட்ட முடியாது எனவும், பாரதிய ஜனதாக் கட்சி அரசு மேற்குவங்கத்தை துன்புறுத்தி வருவதாகவும், அவர் விமர்சித்தார்.
மேலும், கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார், உலகிலேயே மிகச்சிறந்த காவல் ஆணையர், என்றும் மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்தார்.