இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா குரல் கொடுப்பதற்கு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென பாட்டாலி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்று போர்க்குற்றங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யுத்தம் நிறைவுற்று 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்க, இன்று வரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையெனவும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு, இந்தியாவுக்கு இருந்தும் அவ்விடயத்தில் கவனம் செலுத்தாமல் உள்ளமை கண்டிக்கத்தக்கதோர் விடயமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென பசுமை தாயகம் அமைப்பு ஊடாக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.