ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க்குற்றங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஸ்பெயின் நாட்டின் கற்றலோனியா பிராந்தியத்தி;ன் தலைநகரமாக திகழும் பார்சிலோனா மாநகரசபையின் வருடாந்த கூட்டத்தொடரில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழர் இயக்கம் என்ற ஈழத்தமிழர் அமைப்பொன்று கடந்த இரு வருட காலமாக தொடர்ச்சியாக எடுத்த முயற்சியின் விளைவாக இந்த உயர் நிறுவன ரீதியான தீர்மானத்தை பார்சிலோனா மாநகரசபை உத்தியோகபூர்வமாக நிறைவேற்றியுள்ளது.
நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கு தாம் அறிவிப்பதாக பார்சிலோனா நகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈழத்தமிழர்கள் பாரம்பரியமாக 25 நூற்றாண்டுகளிற்கு மேல் இலங்கைத் தீவில் வாழ்ந்து வருகின்ற போதிலும் இலங்கை அரசாங்கத்தால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட தமிழனவழிப்புக்கான நீதி விசாரணையை அனைத்துலக நீதிமன்றம் பொறுப்பேற்று நீதியைப் பெற்றுக்கொடுக்க இத்தீர்மானத்தின் ஊடாக வலியுறுத்தப்படுவதுடன், இவ் விடயங்கள் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ள விசேட பிரதிநிதி ஒருவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நியமிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பார்சலோனா நகரசபையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஏனைய நகரசபைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதுடன், கருத்தியல் ரீதியான முன்னெடுப்புக்களும் நடைபெறுவதாக தெரியவருகின்றது.