மத்திய அரசுக்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சந்தித்த பின்னர், தனது போராட்டத்தைக் கைவிட்டார்.
கொல்கத்தா காவல்துறையின் தலைவர் ரஜீவ் குமாரின் வீட்டிற்கு சீபீஐ அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு செல்ல முற்பட்டபோது கொல்கத்தா காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள்.
உரிய நீதிமன்ற ஆணை இன்றி சீபீஐ அமைப்பினர் சென்றதாகவும், இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் மத்திய அரசின் செயலெனவும் கண்டனம் தெரிவித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மூன்றாவது நாளாக சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திராவிட மன்னேற்றக்கழக மக்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கொல்கத்தா சென்று மமதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே கொல்கத்தா காவல்துறையின் தலைவர் ரஜீவ் குமார், சீபீஐ விசாரணைக்கு முன்னிலையாகவேண்டுமெனவும், சீபீஐ அமைப்பு அவரைக் கைது செய்யக் கூடாதெனவும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புக்கு குறித்து வரவேற்பு வெளியிட்ட பானர்ஜியை பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக பானர்ஜி செய்தியார்களிடம் அறிவித்தார்.