தமிழக அரசின் வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் சமர்ப்பித்தார்.
புதிய வரிகள் எவையும் அறிவிக்கப்படாத வரவு செலவுத்திட்டமாக அது அமைந்தது. எட்டாவது முறையாக அவர் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
தமிழக அரசின் பற்றாக்குறை 44,176 கோடி ரூபாவாகவும், கடன்களின் அளவு 3.97 லட்சம் கோடி ரூபாவெனவும் பன்னீர்செல்வம் அறிவித்தார். எதிர்வரும் நிதியாண்டில் தமிழக பொருளாதாரம் 8.16 சதவீதத்தால் வளர்ச்சியடையுமென அவவர் கூறினார்.
பல்வேறு நலத்திட்டங்களையும் வரவு செலவுத் திட்டத்தில் பன்னீர்செல்வம் அறிவித்தார்
வரவு செலவுத்திட்டக் கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுமென சட்டப்பேரவை அறிவித்துள்ளது.
எனினும் தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம், ஏழை எளிய மக்களுக்குப் பயனளிக்காத வரவு செலவுத் திட்டமென எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்ராலின் குறை கூறியுள்ளார்.
அரசு வளர்ச்சிக்குப் பணம் செலவிடுவதற்குப் பதிலாக, பெற்ற கடனுக்கு வட்டி செலுத்துவதையே இந்த வரவு செலவுத் திட்டம் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் அறிவிப்புக்கள் எவையும் வரவு செலவுத் திட்டத்தில் இல்லையெனக் குறை கூறிய அவர், சுமார் ஒரு கோடி படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர்களைப் பதிவு செய்துள்ள நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.