புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் எத்தனிப்பு தோல்வியைத் தழுவினால் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும், புதிய அரசியல் அமைப்பினை முயற்சி தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரைக்கும் தான் அதில் முழுமையாக ஈடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய நம்பிக்கையானது வழிநடத்தல் குழுவின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எனவும், இடைக்கால அறிக்கை வெளிவரவேண்டும் என்பதே எதிர்பார்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு உரிய தருணத்தில் வரும் என்று தாம் நம்புவதாகவும், பிரதமர் மற்றும் அரச தலைவரின் கருத்துகளை வைத்து கணிப்புக்களை மேற்கொள்ள முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் சதிப் புரட்சிக் காலத்தைப் பார்த்தால், மீண்டும் அரசு மாற்றப்படும் என்று எவரும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, ஆனால, அது மாற்றப்பட்டமை நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதியஅரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும், தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அடுத்த நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்றலாம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தோல்வி காணும் பட்சத்தில் தான் அரசியலில் இருந்து விலகுவேன் என்று மற்றுமொரு நேர்காணலில் சுமந்திரன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.