ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கு நேற்று மாலை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து அவந்திபோரா நெடுஞ்சாலையில் சென்றபோது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இந்தத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் பலரின் நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கொடூரமான தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. பயங்கரவாத தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் இந்தியாவின் உரிமையான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவலிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து ஜான் போல்டன் கூறும்போது,
”தீவிரவாத தாக்குதலை முன்கூட்டியே அறிந்து அதனை தடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு செய்வோம். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவலிடம் 2 முறை பேசினேன். இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது. எந்தவொரு நாடும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளது” என்று கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பேசும்போது,
“ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் 2002ம் ஆண்டிலேயே பாகிஸ்தானில் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுவிட்டது. இருந்தபோதிலும் அந்த இயக்கம் தொடர்ந்து இயங்கி வருகிறது.
2001ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை அமெரிக்கா அறிவித்தது. எதிர்காலத்தில் அந்த இயக்கம் தாக்குதல் நடத்தாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை நாங்கள் அளிப்போம். பாகிஸ்தான் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஐக்கிய நாடுகள் அவையின் தடை பட்டியலில் உள்ள அமைப்புகளுக்கான நிதி மற்றும் பொருளாதார வளங்களை உடனடியாக முடக்கவேண்டும்” என்று கூறினார்.