காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக எல்லைப் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளதற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் படையினர் பயணித்த வாகனங்களின்மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினார். இந்த தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு, இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இந்திய விமானப்படை பதிலடி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஆக்கிர மிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்பட்டும் வரும் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப் படையின் போர் விமானம் மிராஜ் 2000 வகை விமானங்கள் வெடிகுண்டுகளை வீசி 3 முக்கிய பங்கரவாத முகாமை முற்றிலுமாக தகர்த்துள்ளது. இந்த தாக்குதலில் 200 முதல் 300 பேர் வரை கொல்லப் பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
விமானப் படையின் தாக்குதலை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அவசரக் கூட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், இந்திய எல்லையில் விமானப் படை விமானங்கள், 10 ஆயிரத்தும் மேற்பட்ட ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமானப் படையின் தாக்குதலுக்கு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து பாராட்டு
கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
போர்மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே!
அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்
இவ்வாறு, வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்