ஒன்டாரியோவில் சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தலைமயிலான அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
60 பில்லியன் டொலர் பெறுமதியான சுகாதார நலன் திட்டம் குறித்து கண்காணிப்புச் செய்யும் பொறுப்பு ஒன்டாரியோ ஹெல்த் என்னும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது சுகாதார சேவைகளை வழங்கும் பல்வேறு அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒரு பாரிய அமைப்பாக செயற்படும் என்று மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்ரீன் எலியட் இச்சட்ட மூலத்தை சட்டசபையில் சமர்ப்பித்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
மாகாண மக்களுக்க தரமான சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
எனினும் இத்திட்டத்தால் எந்தளவு நிதியை மீதப்படுத்தி நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்பது குறித்தோ, மேலும் சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புக்கள் இழக்கப்படுமா என்பது குறித்த சந்தேகங்களுக்கு எவ்வித விளக்கங்களும் வழங்கப்படவில்லை.
இதேவேளை கடந்த மாதம் இந்தச் சட்டமூலத்தின் கசியவிடப்பட்ட வடிவமென என்டீபீ ஒரு வரைபை வெளியிட்டிருந்ததுடன், மாகாண சுகாதார சேவையைத் தனியார் மயப்படுத்துவதற்கு முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான புறோகிரசிவ் கொன்சவேடிவ் அரசு முற்பட்டுள்ளதாக கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.