கன்னியாகுமரியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்திய வைகோ தனது ஆதரவாளர்களுடன் இன்று கைது செய்யப்பட்டார்.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வந்தடைந்தார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
போலீஸ் தடியடி
இந்த நலையில், தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தலைமையில் நெல்லை காவல் கிணறு பகுதியில் போராட்டம் நடந்தது. அவரது தலைமையில், தொண்டர்கள் கருப்பு கொடி காட்டினர்.
இந்த போராட்டத்தில் அங்கிருந்த தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதனால் போலீசார் தடியடி நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். கூடுதல் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டார் என வைகோ குற்றச்சாட்டு கூறினார். தொடர்ந்து அவர், பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டார். இந்த நிலையில், பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்திய வைகோ தனது ஆதரவாளர்களுடன் போலீசாரல் இன்று கைது செய்யப்பட்டார்.