ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார், ஆனால் அவரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி இன்று தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்தது.
இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டன. இதையடுத்து அபிநந்தனை இன்று விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். இதில் பேசிய அவர், ”மசூத் அசார் பாகிஸ்தானி்ல் தான் இருக்கிறார். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. அதேசமயம் புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா தரப்பில் உறுதியான ஆதரங்களை தந்தால், அது பாகிஸ்தான் நீதிமன்றம் ஏற்கும் வகையில் இருந்தால் நாங்கள் மக்களை சமாதானம் செய்யமுடியும்.
அதேசமயம் மோதலை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் எப்போதுமே தயாராக உள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தைக்கு வந்தால் எங்கள் தரப்பை நாங்கள் தெளிவுபடுத்த முடியும். அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும்” எனக் குரஷி தெரிவித்தார்.