சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை கார் குண்டு தாக்குதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
18 பேருக்கும் அதிகமானோர் உயிழந்துள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 36 மரணங்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
சோமாலியா நாட்டில் ஆளும் அரசுக்கெதிராக அல் -ஷபாப் அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த குழுவானது பல வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் பாரியளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தலைநகர் மொகடிஷு மக்கா அல் முக்காரமா வீதியில் நேற்று முன் தினம் தற்கொலை கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
தாக்குதலினால் அங்கிருந்த கட்டடங்கள் மற்றும் 12க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.