எந்ததொரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்திகொள்ளாமல் பிரதமர் நரேந்திர மோடியினால் 5 நிமிடம் கூட இருக்க முடியாதென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், துலே பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ராகுல் காந்தி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“புல்வாமா தாக்குதலின் பின்னர் மத்திய அரசை எதிர்த்து யாரும் கருத்து வெளியிட கூடாதெனவும் தீவிரவாதத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் மோடி கூறியிருந்தார்.
மேலும் நாடு தற்போது ஒன்றுபட்டுள்ளதாக கூறிவிட்டு காங்கிரஸை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றார். இதேவேளை ரபேல் விமான ஒப்பந்தம் மற்றும் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் என பலவற்றிலும் மோடி ஊழலில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் பொதுக்கூட்டங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் மோடி அதனை நிறைவேற்றுவதில்லை. இவரின் சில செயற்பாடுகளால் ஏழை மக்களே மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.