புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
விமானத்தில் இருந்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்தன.
இதையடுத்து, அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி அவர் விடுதலையும் செய்யப்பட்டார்.
இம்ரான்கானின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலக நாடுகளில் இருந்து இம்ரான்கானின் நடவடிக்கையை மக்கள் டுவிட்டரில் பாராட்டினர்.
இந்நிலையில் இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் இதுதொடர்பான கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. டுவிட்டரில் #NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace மற்றும் #ThankYouImranKhan ஆகிய ஹேஷ்டேகுகள் இம்ரான்கான் நடவடிக்கையை பாராட்டி, அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில் இம்ரான்கான் டுவிட்டரில்,”நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களின் பிரச்சனையை தீர்த்து, அமைதியை நிலைநாட்டி, துணை கண்டத்தின் வளர்ச்சியை யார் ஏற்படுத்துகின்றாரோ, அவரே நோபல் பரிசு பெற தகுதி பெற்றவர்” என்று பதிவிட்டுள்ளார்.