இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழைக்கு 50 பேர் உயிரிழந்தனர். மேலும், 59 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபூரா அருகில் உள்ள சென்டானியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள் சரிந்தன.
இந்த மழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 59 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிட நிறுவன செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ தெரிவித்தார்.
தற்போது மழை குறைந்துள்ளது. மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.