இலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறல் தொடர்பில்; அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தொடரில் கருத்துரைத்த அவர் சுட்டிக்காட்டினார்.
குற்றவியல் பொறுப்புக்கூறலை கோரி போராடி வரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம், அக்குற்றங்களை மன்னித்து மறந்துவிடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகக் கோரியுள்ளார்.
இலங்கை அரசின் உயர் மட்ட தலைவர்கள் குற்றவியல் பொறுப்புக்கூறலை தொடர்ந்தும் ஒருமனதாக நிராகரித்து வருகின்றமையானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசையை நிறைவேற்ற முடியாது என்பது தெட்டத் தெளிவாக புலப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கலப்பு நீதிமன்ற பொறிமுறைக்கு இலங்கையில் இடமில்லை என்ற வெளிவிவாகர அமைச்சர் திலக் மாரப்பனவின் கருத்தானது, அரசாங்கத்தை தப்பிக்க வைக்கும் ஒன்றாகவே அமைந்துள்ளதாக ஊடகம் ஒன்றுக் கருத்துரைத்த கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.