பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது மற்றொரு தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானின் நிலைமை மிகவும் மோசமானதாகிவிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு சர்வதேச நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதற்கு பதிலடியாக இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில்,
”தங்கள் நாட்டில் புகலிடங்களை அமைத்துள்ள பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுக்கவேண்டும். குறிப்பாக ஜெய்ஷ்–இ-முகமது மற்றூம் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அப்படி எடுத்தால்தான், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் தனியும்”
”இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்து, அங்குள்ள தீவிரவாத அமைப்பு இந்தியாமீது மற்றொரு தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தானுக்கு பெரிய சிக்கலாக அமையும். மேலும், பிராந்தியத்தில் ஏற்பட்டு பதற்றத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும். இது 2 நாடுகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும்” என்று கூறினார்.
”இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவானதுமே அமெரிக்கா தலையீட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன்படி சில நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. சில பயங்கரவாதிகள் கைது, அவர்களது சொத்துக்கள் முடக்கம் போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் முன்னெடுத்தது.
ஆனாலும் இந்த நடவடிக்கை போதுமானவை அல்ல. பயங்கரவாதிகள் இயக்க தலைவர்கள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் நிலை உள்ளது. அதை பாகிஸ்தான் தடுக்கவேண்டும். இனியும் தாக்குதல் நடக்காது என்ற உத்தரவாதத்தை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
“பயங்கரவாதத்திற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்கும். தெற்கு ஆசிய பகுதியில் அமைதி நிலவவேண்டும் என்பது மட்டுமே எங்கள் எண்ணமாகும். அதை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.