மன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புளோரிடா பீற்றா அனெலிட்டிக்ஸின் கார்பன் காலப் பரிசோதனை அறிக்கை வெளியாகிய பின்னர் கடந்த 8 ஆம் நாள் மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணியானது இடைநிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் கடந்த 9 ஆம் நாள் முதல் இன்று வியாழக்கிழமை வரை அகழ்வுப் பணிகள் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம் பெறவுள்ளது.
குறித்த கூட்டத்தின் பின்னரே மனித புதைகுழியை தொடர்சியாக அகழ்வு செய்வதா அல்லது அகழ்வு பணியை முற்றாக முடிவுறுத்துவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதேவேளை காலப்பகுதியை தீர்மானிக்கும் கார்பன் காலப் பரிசோதனை அறிக்கையை நிராகரிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அறிவித்துள்ள நிலையில், மேலதிக ஆய்வு அறிக்கை ஒன்றை பிறிதொரு ஆய்வு கூடத்தில் நடத்துவது குறித்த வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளைய கலந்துரையாடலில் இக்கோரிக்கை குறித்தும் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.