ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற அரசாங்கம் தவறும் பட்சத்தில் இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தீர்மானத்தில் 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.
அதன்படி இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.நா.வில் தெரிவித்துள்ளமை ஏற்க முடியாது.
ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் நேற்றுடன் மூன்றறாவது முறையாக இணை அனுசரணை வழங்கியுள்ளது. அதன்படி, ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அதனை செய்ய அரசாங்கம் தவறும் பட்சத்தில் இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த அல்லது முழுமையான சர்வதேச நீதிப்பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அரசாங்கத்திற்கு அறிவித்துக் கொள்ள விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.