அமெரிக்கா வரும் 2024ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
கடந்த 1972ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நீல் ஆம்ஸ்டிராங் உட்பட மூன்று விண்வெளி வீரர்களை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பியது. அமெரிக்காவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை இதுவரை வேறு எந்த நாடாலும் முறையடிக்கப்படவில்லை.
ஆனால் அதன்பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா மேற்கொள்ளவில்லை. அதன் காரணமாக பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நாசா உண்மையில் 1972ம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பவில்லை என்பது போன்ற பல சர்சைக்குரிய தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே அமெரிக்க விண்வெளி துறையை மறுசீரமைப்பதில் ஆர்வம் காட்டினார்.
அமெரிக்க விண்வெளி வீரர்கள் மீண்டும் நிலவுக்கு திரும்ப வேண்டும். அதன் பின் செவ்வாய்கிரகத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் கால் பதிக்க வேண்டும் என்று கடந்த 2017ம் ஆண்டு அறிவித்தார்.
அதை தொடர்ந்து நிலவுக்கு 2028ம் ஆண்டுக்குள் மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க துணை அதிபரும் வெள்ளை மாளிகையின் தேசிய விண்வெளி கவுன்சில் தலைவருமான மைக் பென்ஸ் வரும் 2024ம் ஆண்டுக்குள் அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் என அறிவித்தார்.
‘‘அமெரிக்க விண்வெளி வீரர்களை அடுத்த ஐந்தாண்டுக்குள் நிலவுக்கு அனுப்புவது அதிபர் டிரம்ப் அரசின் முக்கிய கொள்கையாகும். நிலவில் கால் பதிக்கும் அடுத்த ஆண் மற்றும் பெண் அமெரிக்க ராக்கெட் மூலம் நிலவுக்கு சென்ற அமெரிக்கர்களாக தான் இருப்பார்கள்’’
‘’இந்த திட்டத்தை செயல்படுத்த நாசா 2028ம் ஆண்டு என இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அதை ஏற்கமுடியாது. அமெரிக்கா 50 ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறையாக நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெறும் 8 ஆண்டுகள் தான் ஆனது’’
‘‘அப்படியிருக்கையில் இந்த நவீன காலக்கட்டத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப ஏன் 11 ஆண்டுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது நமது விண்வெளி திறன் மேம்பட்டுள்ளது. எனவே அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் நிலவில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் கால் பதிப்பார்கள்’’ என்று மைக் பென்ஸ் தெரிவித்தார்.
‘‘இந்த திட்டத்தில் தோல்வி என்பதற்கு இடமில்லை. நாசா எதையும் தாமதப்படுத்தும் தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு விரைவாக செயலாற்ற வேண்டும். நாசா இதற்கு தயாராக இல்லை என்றால் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் உதவிய அமெரிக்க அரசு நாடும்’’ என்று மைக் பென்ஸ் எச்சரித்தார்.
துணை அதிபர் மைக் பென்சின் அறிவிப்புக்கு பதிலளித்த நாசா தலைவர் பிரைடென்ஸ்டைன் நிலவுக்கு செல்வதற்காக பயன்படுத்தப்படவுள்ள எஸ்.எல்.எஸ் ராக்கெட் வரும் 2020ம் ஆண்டுக்குள் தயார் நிலையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.