திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடப்பட்டது. மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றினால் உயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.
மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அறிக்கையை வெளியிட்டு பேசிய மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றினால் நாட்டில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார். அதன் விவரம் :
எதிர்க்கட்சிகள் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த உயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மத்திய அரசு ரத்து செய்த திட்ட கமிஷன் மீண்டும் கொண்டுவரப்படும். தற்போதுள்ள நிதி ஆயோக் அமைப்பால் எந்த பயனும் இல்லை.
பாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும். தற்போதுள்ள நடைமுறையால் உண்மையில் மக்கள் பயனடைகிறார்கள் என்பது தெரியவந்தால் ஜிஎஸ்டியில் எந்த மாற்றமும் செய்யப்படாது.
அரசின் 100 நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும். அதேப்போல் வருவாயும் இருமடங்காக அதிகரிக்கப்படும்.
நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.
பெட்ரோல் விலை கட்டுப்பாடு
பெட்ரோல் விலை உயர்வால் நாட்டின் தொழில்துறை மற்றும் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே பெட்ரோல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தேசிய பெட்ரோலிய சேமிப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். அதன்படி 45 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் முன்பே சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதுள்ள பாஜக அரசின் கீழ் 5 முதல் 6 நாட்களுக்கான பெட்ரோல் மட்டுமே சேமிக்கப்படுகிறது.
மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை கண்காணிக்க வெளிப்படைத்தன்மை கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். மத்திய அரசு திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வழிவகை செய்யப்படும்.
அனைத்து மாநிங்களிலும் லோக்பால், லோல் ஆயுக்தா அமைக்க ஊக்குவிக்கப்படும். அரசு செயல்பாடுகளில் வெளிப்படைதன்மை உறுதி செய்யப்படும்.
பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை வலுப்படுத்த அனைத்து மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
தேர்தல் விதிகள் சீர்திருத்தப்படும். உலகின் 62 நாடுகளில் உள்ளது போல் தேர்தலுக்கான அரசு நிதியுதவியை முறைப்படுத்தும் செயல்திட்டம் உருவாக்கப்படும்.
நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்யப்படும். பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தனியாக பெண்கள் நீதிமன்றம் அமைக்கப்படும்.
சுகாதார திட்டங்கள்
‘அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை, நடுத்தர மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் மருத்துவ சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத்துறைக்கான செலவு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாக நிர்ணயிக்கப்படும். தற்போது இது 1.38 சதவீதமாக உள்ளது.
அனைத்து கிராமங்களிலும் மருத்துவ வசதிகள். தாய் சேய் நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேற்குவங்கத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தியது போல் நோய்வாய்ப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும்.
மேற்கு வங்கத்தில் நடைமுறையில் உள்ளது போல் நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்ற பணியாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
வருடத்திற்கு 5 லட்சம் வருவாய் கொண்ட குடும்பங்களுக்கான காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்.
பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாடுகள் ஊக்குவிக்கப்படும்.
நாடு முழுவதும் சுத்தமான பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக சிறந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.
கல்வி
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கல்விக்கான செலவு 3.24 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்படும். இதில் 70 சதவீத நிதி பள்ளி கல்விக்காகவும் மீதி 30 சதவீதம் உயர் கல்வி மேம்பாட்டுக்காகவும் செலவிடப்படும்.
வேலைவாய்ப்பு சார்ந்த கல்வி அமைப்பை வடிவமைக்க நிபுணர் கமிட்டி ஒன்று நியமிக்கப்படும். தேசியளவில் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் திட்டம் செயல்படுத்தப்படும்.
விவசாயம்
விவசாயிகளின் வருவாய் மேம்படுத்த விளைபயிற்களுக்கான சரியான கொள்முதல் விலை உறுதி செய்யப்படும். விவசாய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உயர்தர விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளிடம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வகை பயிற்களை பயிறுடும் முறையில் கவனம் செலுத்தப்படும்.
விவசாயிகளுக்கு தொலைநோக்கு பார்வையுடனான கடன் திட்டம் அமல்படுத்தப்படும். சிறு, குறு விவசாயிகள்,சொந்த நிலமில்லாத விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தப்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். கடற்கரை பிரதேசங்கள் மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.
தேசிய கால்நடை கொள்கைகள் மறு ஆய்வு செய்யப்பட்டு சீர்திருத்தப்படும்.
புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உணவு பதப்படுத்துதல் சேமித்தல் அதிகரிக்கப்படும்.
தொழில்துறை
சிறு,குறு, நடுத்தர வணிகர்களின் நலனை மேம்படுத்தவும் தொழில்துறை வளர்ச்சிக்காகவும் தேசியளவில் புதிய தொழில்துறை கொள்கை உருவாக்கப்படும்.
தொழில்முனைவோருக்கு தேவையான வங்கி கடன், தொழில்நுட்ப வசதிகள், திறன் மேம்பாடு உள்ளிட உதவிகள் வழங்கப்படும். இதற்காக சிறப்பு செயல்குழு அமைக்கப்படும்.
கிராமப்புற கலைஞர்களுக்கு அடிப்படை வருவாய் மற்றும் இலவச மருத்துவ உதவிகள் அளிக்கப்படும். மலைவாழ் மக்கள் குறிப்பாக வடகிழக்கு மாநில மக்களின் நலனுக்காக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது..