பிரெக்சிட் ஒப்பந்த காலக்கெடுவை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்க வலியுறுத்தி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனல்ட் டஸ்க்குக்கு கடிதம் எழுதி உள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டுமென, இங்கிலாந்தில் 2016ல் நடந்த பொது வாக்கெடுப்பில் பொதுமக்கள் வாக்களித்தனர். அதைத்தொடர்ந்து, 2019ம் ஆண்டு மார்ச் 29ம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு செய்தது. இதற்காக, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஒப்பந்தம் ஏற்படுத்தினர். இந்த ஒப்பந்தத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆளும் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரெக்சிட் ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற ஏப்ரல் 12ம் தேதி வரையிலும், ஒப்பந்தத்துடன் வெளியேற மே 22ம் தேதியும் காலநீட்டிப்பு வழங்கப்பட்டது. இதன் பின் 3வது முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தமும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், பிரெக்சிட் நடவடிக்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வலியுறுத்தி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டெனால்ட் டஸ்க்குக்கு கடிதம் எழுதி உள்ளார். தனது கடிதத்தில் தெரசா மே, ‘தற்போதைய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து எம்பிக்கள், ஒப்பந்தமில்லாமல் வெளியேறவும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, இதில் சுமூக தீர்வு காண வரும் ஜூன் 30 வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளார். இங்கிலாந்தில் மே 23ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த காலக்கெடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.