ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனத்திற்கு மானியம் வழங்குவதை எதிர்த்து ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதித்தால் தக்க பதிலடி தரப்படும் என்று பிரான்ஸ் நிதி அமைச்சர் பிருனோ லி மைய்ர் எச்சரித்துள்ளார்
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு சட்டவிரோதமாக மானியம் வழங்கி வருவதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டி வருகிறது. அதேபோல் ஐரோப்பாவின் ஏர் பஸ் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் மானியம் வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
இவ்வாறு கடந்த 14 ஆண்டுகளாக இரண்டு தரப்பினரும் உலக வர்த்தக நிறுவனத்தில் ஒருவர் மீது ஒருவ
ர் குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் ஏர் பஸ் நிறுவனத்திற்கான மானியத்தை ஐரோப்பிய யூனியன் நிறுத்தவில்லை என்றால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் ஏப்ரல் 8ம் தேதி எச்சரித்தார்.
டிரம்பின் எச்சரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய யூனியன் அவ்வாறு நடந்தால் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று எச்சரித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நிதி அமைச்சர் பிருனோ லி மைய்ர் அமெரிக்கா நிதி அமைச்சர் ஸ்டீவன் முனுச்சினை நேற்று சந்தித்து பேசினார்.
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரூனோ ‘‘இருநாடுகள் இடையேயான இந்த பிரச்சனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும். இதை நாம் தவிர்க்க வேண்டும். ஏர்பஸ் – போயிங் விவகாரத்தில் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான உடன்பாடு ஏற்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
ஒருவேளை ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதித்தால் அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அமைச்சர் பிருனோ லி மைய்ர் எச்சரித்தார்.