இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்:
“இலங்கையில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கவும், மேலும் பல நூறு பேர் காயமடையவும் காரணமாக அமைந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளேன. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தோர் விரைவில் முழுமையாக நலமடைவார்களென்ற எதிர்பார்ப்பை கனேடிய அரசின் சார்பாகவும் அனைத்துக் கனேடியர்களின் சார்பாகவும் வெளியிடுகிறேன்.
“தங்கு விடுதிகள் மீதும் தேவாலய வழிபாடுகளின் மீதும் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல்களைக் கனடா கடுமையாகக் கண்டிக்கிறது. வழிபாட்டு இடங்கள் புனிதமானவை, அங்கு அனைவரும் பாதுகாப்பாக உணரவேண்டும். மத நம்பிக்கையின் அடிப்படையில் எவரும் தாக்கப்படக் கூடாது.
“உலகெங்கும் வாழும் பல மில்லியன் பேர் இயேசுவின் – இரக்கம், அன்பு ஆகிய செய்திகளை நினைவுகூரும் வேளையாகவும், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் ஒன்றுசேரும் வேளையாகவும் உயிர்த்த ஞாயிறு விளங்குகிறது. நாம் அனைவரும் கொண்டிருக்கும் நம்பிக்கையை இத்தகைய தாக்குதல்கள் பலவீனப்படுத்த நாம் அனுமதிக்க முடியாது.
“இலங்கை மக்களுக்கும், இன்றைய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஏனைய சமூகத்தினருக்கும் கனடா ஆதரவாக இருக்கிறது. உங்களுடனும், ஏனைய சர்வதேச பங்காளிகளுடனும் இணைந்து, உலகெங்கும் பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கும், சமாதானத்தையும், உறுதிப்பாட்டையும் மேம்படுத்துவதற்கும் நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.