லங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட எட்டு வெவ்வேறு தாக்குதல்களில் 321 பேர் உயிரிழந்ததுடன் 500 ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் சீற்றத்தை உண்டாக்கியுள்ள இந்த தாக்குதல்களுக்கு தெளஹீத் ஜமாத் எனும் உள்ளூர் இஸ்லாமியக் குழுவே காரணமென இலங்கை தெரிவித்திருந்தது.
இதேவேளை இந்த தாக்குதல்களுக்கு ISIS தீவிரவாத அமைப்பின் முன்னைய தாக்குதல்களுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதல்களுக்கு இலங்கையை சேர்ந்த குழுவொன்று காரணமாக இருந்தாலும் ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புக்களின் அதிநவீன தொழில்நுட்ப பின்னணியில் நிச்சயமாக ஐஸ்ஐஸ் அமைப்பின் ஈடுபாடு உள்ளடக்கப்பட்டிருக்குமென சர்வதேச வல்லுனர்களும் தெரிவித்திருந்தனர்.