இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது என்று குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா, இது நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய வேளையில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த தீவிரவாத இயக்கம் உருவாகி தாக்குதல் மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் ஏழு எட்டு ஆண்டுகள் எடுத்திருக்கும்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பொறுப்பினை மஹிந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புலனாய்வுப் பிரிவு வலுவான நிலையில் இல்லை என்பதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என்று தெரிவித்த அவர், எங்கள் பக்கத்திலும் பிழைகள் உள்ளன.
அரசுத் தலைவர் மிகவும் பலவீனமானவராகவே காணப்படுகின்றார் எனவே அரசாங்கமும் அமைச்சரவையும் பலவீனமடைவதனை தவிர்க்க முடியாது.
புலனாய்வுப் பிரிவினை வலுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது.
மக்கள் மீளவும் சோதனைக்கு உட்படுத்தப்படக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை உருவாகியுள்ளது.
தனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் அதனால் மைத்திரியை பகைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் சிலர் ஆலோசனை வழங்கினர்.
எனினும், சில உண்மைகளை வெளிப்படையாக போட்டு உடைக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு என்றும் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
பாதுகாப்பினை பலப்படுத்தி எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.