“Designed by Apple in California. Assembled in China” இந்த வரிகளைதான் ஆண்டாண்டு காலமாக உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் பல்வேறு தயாரிப்புகளில் பார்த்து வருகிறோம்.
ஆனால், இந்தியா, வங்கதேசம், இந்தோனீசியா போன்ற அதிக மக்கள் தொகையை கொண்ட ஆசிய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளில் ‘Made in China’ என்ற வார்த்தையை திறன்பேசி மட்டுமல்லாது தினசரி வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
ஆம், தொழில்நுட்பத்தின் எந்த சாராம்சத்தை எடுத்தாலும், சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ‘அமெரிக்கா’ என்ற வார்த்தையை சொல்ல வைத்த காலம் மாறி, தற்போது அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் நிலையை சீன நிறுவனங்கள் எட்டியுள்ளன என்று கூறினால் அது மிகையாகாது.
அமெரிக்கா – சீனா இடையிலான மூன்றாண்டுகால வர்த்தகப் போர் தற்போது தொழில்நுட்ப போர் என்றழைக்கப்படும் அளவுக்கு பிரச்சனையின் வீரியம் அதிகரித்துள்ளது.
‘ஹுவாவே’ எனும் சீனாவை சேர்ந்த உலகின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை மையமாக கொண்டு நடந்து வரும் இந்த தொழில்நுட்ப போர், தற்போது அதனுடன் சிறிதும் தொடர்பில்லாத பல்வேறு நாடுகளை சேர்ந்த சாமானிய மக்களை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் சீனாவின் தவறான பொருளாதார கொள்கைகள் தனது நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறார்.
2017ஆம் ஆண்டு ஒருபடி மேலே சென்று, சீனாவின் பொருளாதார கொள்கைகள் குறித்த விசாரணை ஆணையத்தை அமைத்த டிரம்ப், அதன் இறுதி அறிக்கையின் அடிப்படையில், சீனாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படுத்தினார்.
அதாவது, 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 250 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு டிரம்ப் கூடுதல் வரி விதிக்க, அதற்கு போட்டியாக தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 110 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க தயாரிப்புகளுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது.
இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து வரும் நிலையில், இருநாடுகளும் அடுத்தடுத்து இறக்குமதி வரிகளை அதிகரிக்கப் போவதாக அச்சுறுத்தி வருகின்றன.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம், உள்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க முடியுமென்று நம்பும் டிரம்ப், சீன இறக்குமதிகளின் மீது இவ்வாறு கூடுதல் வரிகளை விதிப்பதன் மூலம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை மலிவடைந்து அவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் என்று டிரம்ப் நம்புகிறார்.
வர்த்தகப் போர் எப்படி தொழில்நுட்ப போரானது?
நிலைமை இவ்வாறு சென்றுகொண்டிருக்க, சாம்சங்கிற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹுவாவே நிறுவனம், இரான் மீது தான் விதித்துள்ள தடைகளை மீறி அந்நாட்டுடன் தொழிற் மேற்கொள்வதாகவும், தனது நாட்டின் கண்டுபிடிப்புகளை திருடுவதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டியது.
மேற்கூறிய குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, கனடாவிற்கு சென்ற ஹுவாவே நிறுவனத்தின் தலைமை நிதியதிகாரியும், அதன் நிறுவனரின் மகளுமான மெங் வாங்சோ அமெரிக்காவின் கோரிக்கைக்கிணங்க கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக கனடா – சீனா இடையிலான உறவும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. பிணையில் வெளிவந்துள்ள மெங்கை கனடாவிலிருந்து நாடுகடத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அதே வேளையில், ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகத்தையும் ஆளப் போகும் ஐந்தாம் தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்பத்தைஉருவாக்குவதில் அமெரிக்க மற்றும் கொரிய நிறுவனங்களை முந்திய சீனாவின் ஹுவாவேவின் வளர்ச்சி மற்ற நாடுகளை திடுக்கிட வைத்தது. ஆனால், ஹுவாவே நிறுவனத்தின் மீது சமீப காலமாக பாதுகாப்பு சார்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் டிரம்ப், இம்மாதத்தின் மத்திய பகுதியில் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப துறையில் அயல்நாட்டு சக்திகளின் ஊடுருவலை தடுப்பதாக கூறி அவரசநிலையை பிரகடனம் செய்தார்.
இந்நடவடிக்கையின் மூலம், அமெரிக்க நிறுவனங்களுடன் ஹுவாவே மேற்கொள்ளும் தொழிற் பரிமாற்றங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. இதன் படி, ஹுவாவே நிறுவனத்தின் திறன்பேசிகளில் பதியப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான புதிய பதிப்புகளையும், செயலிகளின் பயன்பாட்டையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து மற்ற முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹுவாவேயுடனான ஒப்பந்தங்களை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஹுவாவே அபாயகரமான நிறுவனமா?
அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுடன் தொழில்புரிவதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஹுவாவே மீது டிரம்ப் வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்வலைகளை எழுப்புகின்றன.
ஹுவாவே நிறுவனத்தை வைத்து சீனா உலக நாடுகளை உளவுப் பார்ப்பதாகவும், அதன் காரணமாக தங்களது நாட்டின் பாதுகாப்பில் பிரச்சனை எழுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் டிரம்ப் கூறுகிறார்.
அந்த அச்சத்திற்கு பின்னால் ஒரு பெருங்கதையும் உள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் அமைந்துள்ள பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகம் முழுவதும் சீனாவின் நிதியுதவியில் கட்டப்பட்டதாகும். அதுமட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடுகளின் தொலைத்தொடர்புத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நிறுவனங்களே அதன் கணினிகள் மற்றும் இணையதள கட்டமைப்பையும் உருவாக்கியிருந்தன.