இனவெறி மற்றும் பாகுபாடுகளை தூண்டும் வீடியோக்களை தடை செய்யப்போவதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. யூடியூப் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கான எதிரான கொள்கையை எப்போதுமே கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பாகுபாட்டை ஊக்குவிப்பதற்காக ஒரு இனம் உயர்ந்தது என சித்தரிக்கும் வீடியோக்களை தடை செய்ய முடிவெடுத்திருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய கொள்கை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ள யூடியூப் நிறுவனம் அது படிப்படியாக முழுமையாக அமல்படுத்தப்பட சில மாதங்கள் ஆகலாம்.
இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமலுக்கு வந்துவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் மசூதி ஒன்றில் நடைபெற்ற தாக்குதல் யூடியூபில் நேரலையாக ஒளிபரப்பானதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக தலைவர்கள் குரல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்கள் தாமாக முன்வந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான 90% வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடிக்கு யூடியூப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மார்ஃபிங் செய்த ஒரு சில வீடியோக்கள் மட்டுமே இருக்கிறது என்றும் யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல், இந்திய விமானி அபிநந்தன் தொடர்பான, 11 வீடியோ காட்சிகளை உடனடியாக நீக்குமாறு யூடியூப் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனை ஏற்றுக்கொண்ட யூடியூப் நிறுவனம், அந்த வீடியோ காட்சிகளை நீக்கியது. சட்டப்படி விடுக்கப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது எங்கள் கொள்ளையாக உள்ளது என்று யூடியூபின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.