சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே குறவன்குப்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவி காவியா சமூகவலைதளங்களில் பரவிய அவதூறுகளால் தற்கொலை செய்துகொண்டர்.
இதனையறிந்து அவரை திருமணம் செய்துகொள்ள இருந்த அவரது உறவினரான விக்னேஷ் என்ற இளைஞரும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது.
சமூக வலைதளங்களில் ஆக்கபூர்வமான கருத்துகளை பதிவு செய்யாமல் இதுபோன்ற கருத்துகளை பதிவதால் பல்வேறு சிக்கல்கள் எழுகிறது. இது இந்தியா முழுவதும் இது போன்ற தீங்கு பரவுகிறது. எனவே மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகளை வரையறுத்து கட்டுபாடுகளை விதிக்க வேண்டும்.
அரபு நாடுகளில் சமூக வலைதளங்கள் கட்டுபாட்டில் உள்ளது. ஆபாசங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஏன் இது போன்று இந்திய அரசு பயன்படுத்தகூடாது.
பாடசாலை மாணவர்களை குறிவைத்து ஆபாச வலைதளங்களை பார்க்க வைக்கிறார்கள். இது போன்ற சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட யாருக்கும் இடமளிக்க கூடாது.” என கூறினார்.