வெனிசுவேலா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் கைடோ தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவில் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரி ரஃபேல் அகோஸ்டா தடுப்புக்காவலின் போது உயிரிழந்தமையினைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனநாயகவாதிகளான எங்களுக்கு, பிணைக் கைதிகளை வைத்து மிரட்டும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் சர்வாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் கிடையாது.
எனினும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நிக்கலஸ் மதுரோவின் ஆட்சியை கலைப்பது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அதுகுறித்து பரிசீலிப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்க்கவும், அவரை படுகொலை செய்யவும் மேற்கொள்ளப்பட்ட சதி முறியடிக்கப்பட்டதாக அந்த நாட்டு அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடற்படை அதிகாரி ரஃபேல் அகோஸ்டாவை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அகோஸ்டா கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம், வெனிசுவேலாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.